குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்! பஞ்சாப் முதல்வர் திட்டவட்டம்

சண்டிகர்:

குடியுரிமை சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று  பஞ்சாப் முதல்வர் போர்க்கொடித் தூக்கி உள்ளார்.

மத்தியஅரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவில் அண்டை நாடு களான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அந்த நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த திங்கட்கிழமை மக்களவையிலும், புதன்கிழமை  மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் நேற்று இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இதனை அடுத்து குடியுரிமை சட்டம் அமலானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அசாமில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

இந்த நிலையில் புதிய குடியுரிமைச் சட்டம் சட்டத்திருத்தத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பகிரங்கமாக அறிவித்து உள்ளார்.  இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள பஞ்சாப் முதல்வர், குடியுரிமை திருத்த சட்டம்,  இந்தியாவின் மத நல்லிண்க்கம்  மீதான நேரடி தாக்குதலாக  இருப்பதால்,  இந்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் ஆளும் மற்ற மாநில முதல்வர்களும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான நிலை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.