பெங்களூரு:

காவிரி பிரச்சினையில், உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  தமிழகம் போராட்டத்தை தொடர்ந்தால், தமிழக வாகனங்களை கர்நாடகாவுக்குள் நுழைய விட மாட்டோம் என கன்னட சாலுவாலிய கட்சி தலைவரான  வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இது கர்நாடகாவிலும் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகம்தான் உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் போராட்டம் நீடித்தால், வரும் 16-ம் தேதி முதல் தமிழக வாகனங்களை கர்நாடகாவுக்குள் நுழைய விடாமல் தடுப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், மே 3-ம் தேதி உச்சநீதி மன்றம் தெரிவிக்கும்  உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக  முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.