“தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுக்கு அனுமதி அளிக்கமாட்டோம்!” காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் அறிவிப்பு

மிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுக்கு அனுமதி அளிக்கமாட்டோம்” என்று- காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர்  மசூத்ஹுசைன் தெரிவித்துள்ளார்

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை ஒன்றை  கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்றும் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துவிட்டது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், திட்ட வரைவுக்கு மட்டுமே மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. ஆகவே இறுதி ஒப்புதல் பெறுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் அணைக் கட்ட அனுமதிக்ககூடாது எனவும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்  பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.

இதையடுத்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத்ஹுசைன் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடகாவுக்கு ஒப்புதல் தர மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள் மேகதாது அணை வருவதால் நிச்சயம் இந்த விவகாரத்தில் தலையீடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

கார்ட்டூன் கேலரி