கொல்கத்தா:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினர் துப்பாகி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே கர்நாடக மாநில பாஜக அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த முதல்வர் எடியூரப்பா, இறந்த இருவரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று கூறி, நிதிஉதவியை கேன்சல் செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த  நிலையில், மம்தா, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா  ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்ந்துவரும் நிலையில், மத்தியஅரசின் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மேற்குவங்கம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்கள் அறிவித்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மேற்குவங்க முதல்வர்  கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, மக்களோடு மக்களாக இணைந்து கண்டனப் பேரணி நடத்தி வருகிறார். இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மம்தா, பேரணி நிறைவடைந்ததும் உரையாற்றினார்.

அப்போது,  குடியுரிமை திருத்த சட்டத்தை  மத்தியஅரசு திரும்ப பெறும் வரை அமைதியான வழியில்  போராட்டங்கள் தொடரும் எனவும், பாஜக நெருப்புடன் விளையாட வேண்டாம் எனவும், “மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைக்காக ஜனநாயக வழியில் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கிறேன். யாருக்கும் பயப்படாதீர்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசும் மாணவர்களை பாஜக மிரட்டுகிறது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என நான் பாஜகவை எச்சரிக்கிறேன். கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது உயிரழந்தவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று கர்நாடக மாநில அரசு கூறி உள்ளது.

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த இருவரின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க அரசு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கும் என்றும் தெரிவித்தார்.