ஒரு போட்டியால் அனைத்தும் மாறிவிடாது, மீண்டும் வெல்வோம்: நம்பிக்கை தெரிவிக்கும் கோலி!

வெலிங்டன்: முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு, வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என்றும், ஒரு போட்டியால் அனைத்து மாறிவிடாது என்றும் கூறியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி.

நியூலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கியதிலிருந்து, இந்திய அணி பெற்ற முதல் தோல்வியாக அமைந்தது இது.

இந்நி‍லையில், இந்திய அணியின் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இதுகுறித்து பேசியுள்ள கோலி, “நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இதனால் உலகமே முடிந்துவிட்டது என்று சிலர் நினைக்கின்றனர்.

அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒருபோட்டியில் தோல்வியடைந்துள்ளோம். அடுத்துவரும் போட்டியில் கவனம் செலுத்துவோம். போட்டியில் வ‍ெற்றிபெற கடின உழைப்பு வேண்டும். சர்வதேச போட்டிகளில் வெற்றி என்பது எளிதாக கிடைக்கும் ஒன்றல்ல.

ஒரு தோல்வியால் தன்னம்பிக்கை தகர்ந்துவிடாது. எங்கள் எண்ணங்களை யாரும் மாற்ற முடியாது. அடுத்த டெஸ்ட்டில் எழுச்சிக் கண்டு வெற்றிபெறுவோம்” என்றார் கோலி.