சர்காரை தொடர்ந்து 2.0 படமும் முதல் நாளே வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ்

சென்னை

மிழ் ராக்கர்ஸ் இணைய தளம் சர்கார் படத்தைப் போல் 2.0 படத்தையும் முதல் நாள் அன்றே வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் தொடர்ந்து பல படங்களை முதல் நாள் அன்றே வெளியிட்டு வருகின்றன. ஆரம்பத்தில் படம் வெளியாகி சில நாட்கள் கழித்தே தங்கள் இணையதளத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளீயிடு வந்தனர். ஆனால் சைபர் கிரைமில் இது குறித்து புகார் அளித்த பிறகு முதல் நாளே வெளியிடத் தொடங்கி விட்டனர்.

இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் இந்த இணைய தள அமைப்பாளர்களை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றத்தில் இந்த இணைய தளத்தை முடக்க வழக்கு தொடரப்பட்டது.

அதை ஒட்டி இந்த இணையதளம் முடக்கப்பட்டது. ஆயினும் வேறு பெயர்களில் இணைய தளத்தை தொடங்கி அதில் புதுப் படங்களை வெளியிட ஆரம்பித்தனர். தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து மேலும் எதிர்ப்பு கிளம்பியது. அப்படி இருந்து ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தையும் முதல் நாளே இந்த இணைய தளம் வெளியிட்டது.

விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான சர்கார் படம் வெளியாகும் அன்றே தாங்களும் தங்கள் இணையதளத்தில் வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தனர். அதே போலவே அந்தப் படம் வெளியிடப்பட்டது.

தற்போது மற்றொரு பெரிய நடிகரான ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 என்னும் படம் வெளியாக உள்ளது. இதில் ரஜினிகாந்த் உடன் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் கைவண்ணத்தில் 3 வருடங்களாக பல நூறு கோடி செலவில் இந்தப் படம் தயாராகி உள்ளது.

இந்தப் படத்தையும் படம் வெளி வரும் முதல் நாளே தங்கள் இணையதளத்தில் வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு படக் குழுவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.