சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

உலகம் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களை மத்தியஅரசு சிறப்பு விமானம் அனுப்பி மீட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாத சூழல் உள்ளது.

இதையடுத்து,  திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கின் கடந்த விசரணையின்போது,  வெளிநாடுகளில் சிக்கியுள்ள  தமிழர்களைத் தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் அத்தனை தமிழர்களையும் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவோம் என்று மத்தியஅரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்ந்த பின், மொத்தமாக 286 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5- ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இந்தியாவுக்கு இயக்க வுள்ள 792 விமானங்களில், தமிழகத்துக்கு 127 விமானங்கள் இயக்க உள்ளது என்று தெரிவித்தனர்.

மத்திய அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவரங் களின் படி விமானங்களை இயக்க தவறும் பட்சத்தில், இதே விவகாரத்தில் நீதிமன்றத்தை மீண்டும் அணுக திமுகவிற்கு அனுமதியளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.