கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை

டிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார்.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது.  அந்தக் கட்சி தனித்தோ அல்லது அதிமுக கூட்டணியில்  இணைந்தோ போட்டியிட உள்ள நிலையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் செய்தியாளருக்குப் பேட்டி அளித்துள்ளார்.

முரளிதர் ராவ், “எங்களுக்கு அதிமுகவுடன் நல்ல புரிதல் உள்ளது.   அவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  ஒரு கட்சி ஆவார்கள்.   அவர்களுக்கும் எங்களுக்கும் பாராளுமன்றத்தை தாண்டி நல்ல ஒற்றுமை உள்ளது.   எனவே இந்த கூட்டணியை உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நாங்கள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் போட்டியிட விரும்புவதைத் தெரிவித்துள்ளோம்.  இது குறித்து மாநில பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.   திமுகவினர் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பயப்படுவதால் நீதிமன்றத்தை நாடி வருகிறது.  அவர்கள் தாங்கள் பலவீனமாக உள்ளதை ஒப்புக்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர்.

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரும் இணைவது குறித்து தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. ரஜினிகாந்த் இதுவரை கட்சி தொடங்கவில்லை.   எனவே தற்போது அவரைப் பற்றியோ அவரது எதிர்கால நடவடிக்கைகள் குறித்தோ எவ்வித விமர்சனமும் தேவை இல்லை.   அவர் முதலில் கட்சியைத் தொடங்கட்டும்.  அதன்  பிறகு நாம் விமர்சனம் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.