மகாராஷ்டிராவில் விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம்! பாஜக திடீர் அறிவிப்பு

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி இன்று மாலை கவர்னரை சந்திக்க உள்ள நிலையில், மாநிலத்தில்  விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்று மாநில  பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, சிவசேனா இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. இந்த கட்சிகள்  குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என பாரதீய ஜனதா அதிரடியாக அறிவித்து உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய  மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்,  மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 1 கோடியே 42 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது என்றும்,  நாங்கள் தான் நம்பர் 1 ஆக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், சிவசேனா உள்பட மற்ற கட்சிகறிளன் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியவர், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து எங்களுக்கு 119 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு உள்ளது. எனவே விரைவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்து உள்ளார்.

1990-ம் ஆண்டுக்கு பின்னர் பாரதீய ஜனதாவை தவிர எந்த கட்சிகளும் 100 இடங்களை தாண்டியதில்லை. 164 தொகுதிகளில் போட்டியிட்டு 105 இடங்களில் வெற்றி பெற்றோம். 52 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.