மு.க.ஸ்டாலினுக்கு பாடம் கற்பிப்போம்!: இல.கணேசன் காட்டம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவோம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற மேலவை உறுப்பினர் இல.கணேசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து, அக்கட்சியின் பொதுக்குழு கூடி செயல் தலைவரான மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்ந்தெடுத்தது.  அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “மோடியின் பா.ஜ.க. காவி அரசுக்கு பாடம் புகட்டுவோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று, மு.க. ஸ்டாலினுக்கு இல.கணேசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் – இல.கணேசன்

“தி.மு.கழகத்தின் தலைவராக திரு ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

கலைஞரின் வாரிசு என்பது உண்மை. அது ஒரு கூடுதல் தகுதி மட்டுமே! எனக்குத் தெரிந்து 1975-77 அவசரநிலைக் காலத்திலும் அதற்கு முன்பும் அரசியல் பணியாற்றியவர்; சிறை சென்றவர்; சித்ரவதைக்கு உள்ளானவர்; கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர் என்ற தகுதிகளின் அடிப்படையில் இன்று கலைஞர் அமர்ந்த நாற்காலியில் அமர இருக்கிறார். வாழ்த்துக்கள்!” என்று தனது வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார்.

இல.கணேசன் பதிவு

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வை விமர்சித்து பேசியதை அடுத்து இன்று தனது முகநூல் பக்கத்தில், “பதவி ஏற்கும் ஒருவருக்கு பண்பு கருதி வாழ்த்தினேன். பதவி ஏற்றவர் உரையில் பண்பு இல்லை, பக்குவம் இல்லை, பாரம்பரிய மரபும் இல்லை. பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது” என்று இல.கணேசன் பதிவிட்டுள்ளார்.

You may have missed