சென்னை:

“சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம்!”  என்ற குறிப்பிட்டுள்ள திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் , “மருத்துவ கல்வியில் – அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இடங்களில் BC & MBC உள்ளடக்கிய OBC பிரிவுக்கான 27% இடஒதுக்கீட்டை பாஜக அரசு மறுத்து – சமூகநீதியை சிதைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றது தி.மு.கழகம்”  என்று தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக – உத்தமர் காந்தியடிகள் வலியுறுத்திய மதச்சார்பின்மைக்கு எதிராக – பண்டித நேரு உள்ளிட்ட தலைவர்கள் மதித்துப் போற்றிய பன்முகத்தன்மையைச் சிதைக்கும் நோக்ககில் பாஜகவின் செயல்பாடுகள் உள்ளன என்று சாடியுள்ளார்.
திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள மடல்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்துக் கொண்டி ருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) என்பதுபோல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடித் தமிழகம் வரை கைது நடவடிக்கை கள் – தேசிய பாதுகாப்பு சட்டம் – குண்டர் சட்டப் பாய்ச்சல்கள் – சிறை வைப்பு உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறைமுகமாக அன்றி நேர்முகமாகவே அறிவிக்கப்பட்டு ஆற்றப் பட்ட எமர்ஜென்சியையும், எழுத்தில் வடிக்கவியலா அதன் கொடுமைகளையும், நெளியாமல் வளையாமல் நெஞ்சம் நிமிர்த்தி எதிர் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை, இத்தகைய பூச்சாண்டித்தனங்களால் எவராலும் எதுவும் செய்து விட முடியாது; எந்தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது.

ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பேரியக்கம். அதே வழியில், கண்ணை இமை காப்பதுபோல் கட்டிக்காத்து, இந்தியாவுக்கு வழிகாட்டும் முன்னணி இயக்கமாக வளர்த்தெடுத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர்கள் ஊட்டிய உணர்வும் உறுதியும்தான் உங்களில் ஒருவனான என்னை ஓயாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்கிற ஒரே காரணத்திற்காக; அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியல மைப்புச் சட்டத்திற்கு மாறாக – உத்தமர் காந்தியடிகள் வலியுறுத்திய மதச்சார்பின்மைக்கு எதிராக – பண்டித நேரு உள்ளிட்ட உண்மையான தேசத் தலைவர்கள் பலரும் மதித்துப் போற்றிய இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்திடும் நோக்கத்துடன் மத்தியிலே உள்ள ஆட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதனால் மக்கள் பாதிக்கப்படும்போது, நீதிமன்றத்தை நாடி அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வரிசையில் நிற்கிறது.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாததால், சமூகநீதி சிதைக்கப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றது தி.மு.கழகம். மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை மத்திய அரசு தனது தொகுப்பிற்கு எடுத்துக்கொள்ளும் போது மாநிலங்கள் கடைப்பிடிக்கும் இடஒதுக்கீட்டு அளவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், அதன்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 50% இடஒதுக்கீட்டினை மத்திய அரசின் தொகுப்பிலும் வழங்க வேண்டும் என்பதுமே கழகத்தின் நிலைப்பாடு. அதற்குத் தோழமை சக்திகள் அனைத்தும் அணுக்கமாகத் துணை நின்றன.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ‘வின்’சன் என்று நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட மூத்த வழக்கறிஞரும், கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்கள் எடுத்து வைத்த ஏற்றமிகு வாதங்களாலும், அவரை முன் ஏராகக் கொண்டு தமிழக அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட மற்ற வழக்கறிஞர்களும் ஒருங்கிணைந்து எடுத்துரைத்த ஏற்கத் தக்க வாதங்களின் காரணமாகவும், ‘அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை’ என்கிற அழுத்தமான தீர்ப்பினை வழங்கி, ‘மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும்” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூகநீதிக்கான போர்க்களத்தில் சற்றும் சளைக்காமல் போரிடும் திராவிட முன்னேற்றக் கழகம், இம்முறையும் சட்டரீதியான வெற்றியை ஈட்டியிருக்கிறது. இது நமக்கான தனிப்பட்ட வெற்றியல்ல; பிற்படுத்தப்பட்ட – மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வெற்றி. அதுமட்டுமல்ல, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வாதிடும்போது, பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 18% இடஒதுக்கீட்டிலும் 15% மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை எடுத்துரைத்து நியாயம் கோரியிருக்கிறார். ஒடுக்கப்படுவோர் யாராயினும், அது எவ்வகையிலாயினும், அதற்கு எதிராகப் போராடுகின்ற இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, சளைக்காத சட்டப்போராட்டத்தால் பெற்றுத் தந்தமைக்காகப் பாராட்டியும், அதனை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கழக மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற – உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களுடனான காணொலிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காலந்தாழ்த்தும் நடவடிக்கையுடன், மத்திய அரசு மேல்முறையீடு என்கிற சுற்றி வளைக்கும் சட்டவழியைக் கையாளுமானால் அதனையும் எதிர்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனுவைத் திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ளது.

ஒடுக்கப்படுவோரின் குரலாக உயர்ந்தும் உரத்தும் ஒலிக்கின்ற நமது குரல், நீதிமன்றங்களின் வாயிலாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீதியையும் நியாயத்தையும் பெற்றுத் தருவதை, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பலரும் வரவேற்றுப் பாராட்டுகின்றனர். சமூகநீதி சிந்தனையாளர்கள் – கல்வியாளர்கள் – சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் வழங்கிய பாராட்டுகள் உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது என்றாலும், அதற்கு முற்றிலும் உரியவர்கள், உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள்தான். கழகம் பெறுகின்ற எந்தவொரு வெற்றியும் உடன்பிறப்புகளின் உழைப்பெனும் கழனியில் உணர்வெனும் உரமெடுத்து ஓங்கி விளைவதுதான். எனவே, மத்திய அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடங்கள் தொடர்பான வழக்கில் கழகம் பெற்றுள்ள வெற்றியை மக்களிடம் எடுத்துரைத்து, சமூக நீதியில் தமிழகம் எப்போதும் ஒன்றிணைந்து நிற்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

நாம் நடத்துகின்ற ஜனநாயகப் போர், ஒரு களத்துடன் முடிந்துவிடுவதில்லை. அடுத்தடுத்த களங்களும் உடனுக்குடன் தொடர்கின்றன. கொரோனா பேரிடரால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதன் இன்னொரு கோரமுகம்தான், மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை. உண்மையில் அது புதிய கல்விக் கொள்கை அல்ல; பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்பு மிக்க ‘வர்ண’ப் பூச்சு.

அனைவருக்கும் சமமான கல்வி என்பதற்கு, நூறாண்டு கால ‘மாடல்’ நம் தமிழ்நாடுதான். நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தக் கல்விப் புரட்சி, பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறையில் சாதனைகளைப் புரிந்தது. இந்தியாவின் பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பயின்றோர் மட்டுமின்றி, உயர்கல்வி கற்றோரின் எண்ணிக்கையும் விகிதமும் கூடுதலாக உள்ளது. மதிய உணவு – சத்துணவு – முட்டையுடன் உண்மையான சத்துணவு போன்ற திட்டங்களால் பள்ளியில் இடைநிற்றல் குறைக்கப்பட்டு, சமச்சீர்க் கல்வி முறை வாயிலாக நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வியில் தொழிற்படிப்புகளைத் தேர்வு செய்து மருத்துவர்களாக – பொறியாளர்களாக – வேளாண்துறை வல்லுநர்களாகச் சிறப்பான இடத்தைப் பெறக்கூடிய நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் கல்விமுறையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய மத்திய ஆட்சியாளர்கள், நமது மாணவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கும் வகையிலேயே கடந்த 6 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். “நீட்” எனும் நீண்ட கொடுவாள் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான தொகுப்பு வாயிலாக, சமூகநீதி சிதைக்கப்பட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கை மூலம், மாநில உரிமைகளைப் பறித்து ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்டு, மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை மட்டுமின்றி சமஸ்கிருதத்தையும் திணித்து, இந்தியாவில் உள்ள பிறமொழிகள் – பிற தேசிய இனங்கள் – பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் சிதைக்கும் பேராபத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் 10+2 என்கிற நடைமுறைக்கு மாறாக, 5+3+3+4 என்கிற மாற்றமும், மழலைப் பள்ளிகளிலேயே குழந்தைகளின் இயல்பு நிலைக்கு மாறாக, மரபு சார்ந்த கல்வி என்கிற நெருக்கடியும் இளமையிலேயே மாணவர்கள் மீது நடத்தப்படுகின்ற உளவியல் ரீதியான தாக்குதலாகும். அதுமட்டுமின்றி, கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், அதில் மாநில அரசுகளுக்கு மிச்சமிருக்கும் அதிகாரத்தையும் முழுமையாகப் பறித்து, பாடத்திட்டங்கள் முதல் பல்கலைக்கழக நிர்வாகம் வரை அனைத்தையும் மத்திய அரசே தன் கட்டுப்பாட்டில் சுவீகரித்து வைத்துக்கொள்ளும் என்பது, நமது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது விழும் கோடரி வெட்டு.

இந்த ஆபத்துகளை உணர்ந்துதான் எதிர்க்கட்சியான தி.மு.கழகம் புதிய கல்விக் கொள்கையைத் துணிந்து எதிர்க்கிறது. அது குறித்து விரிவாக விவாதித்து, மாற்றுச் செயல்திட்டங்களை வகுப்பதற்காக நாளை (2-8-2020) உங்களில் ஒருவனான எனது தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வரவேற்புரையாற்ற, கல்வியாளர்களான முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கும் ‘புதிய கல்விக்கொள்கை 2020’ எனும் காணொலி நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

அதன் மூலம், கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை அறிந்துகொள்ளும் வகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது.

எதிர்க்கட்சியான தி.மு.கழகமும் தோழமை இயக்கங்களும் புதிய கல்விக் கொள்கையின் பேராபத்தை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் நிலையில், மாநில உரிமைகளை மொத்தமாகப் பறிக்கின்ற வகையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்தக் கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாட்டை ஆளுகின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பது ஆள்வோருக்கும் தெரியவில்லை; பொதுமக்களுக்கும் அவர்களின் நிலைப்பாடு புதிராக இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு என்றாலே தொடை நடுங்கும் மாநில ஆட்சியாளர்கள், தமிழக மாணவர்களின் நலனை பலி கொடுக்கத் தயாராகிவிட்டார்களா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ, உயர்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ எந்த தெளிவான அறிக்கையும் 31-7-2020 வரை வெளிவராத நிலையில், உணவுத்துறைக்கு அமைச்சராக இருப்பவர், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் எனப் பேட்டியளிக்கிறார். துறை சார்ந்த அமைச்சர்களைக் கடந்து, சூப்பர் முதல்வர்களாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையின் ‘நீயா-நானா’ என்கிற அதிகாரப் போட்டியால், தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய ஆட்சியாளர்கள் வாய்மூடிக் கிடக்கின்ற நிலையில், பொதுமக்களின் மனதை ஆட்சி செய்கின்ற தி.மு.கழகம் தனது தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று, தமிழகத்தின் கல்வி நலன் காக்கின்ற முயற்சியை மேற்கொள்ளும்; மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள் – அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்தியாவைச் சிதைக்கும் பேரபாய சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம்! இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம்! சமூக நீதி காப்போம்! சமத்துவக் கல்வி வளர்ப்போம்!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.