ராமர் கோவில் கட்டுபவர்களுக்கே வாக்கு : ராஜ்நாத் சிங் கூட்டத்தில் கோஷம்

க்னோ

த்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய கூட்டத்தில் இளைஞர்கள் ராமர் கோவில் கட்டுபவர்களுக்கே வாக்கு என கோஷமிட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ராமர் கோவில் கட்டித்தருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.   பல வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த வாக்குறுதியால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது.   அத்துடன் மத்திய ஆட்சியையும் கைப்பற்றியது.

ஆனால் மக்கள் எதிர்பார்த்த ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.   அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணையும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.    அதனால் இந்து அமைப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   உடனடியாக மத்திய அரசு ஒரு அவசர சட்டம்  இயற்றி கோவில் கட்டுமானப் பணிகளை துவங்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

உத்திரப் பிரதேச மாநில லக்னோ நகரில் யுவ கும்ப் என்னும் இளைஞர்கள் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.   இதில் பாஜக அரசின் உள்துறை அமைச்சரும் லக்னோ நகர மக்களவை உறுப்பினருமான ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.  ஆனால் அவருடைய பேச்சுக்கு இடையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் கோஷமிட்டது ராஜ்நாத் சிங் எரிச்சலை கிளப்பி உள்ளது.

நான்கு முறை இந்த கோஷமிடுவது தொடர்ந்துள்ளது.  அந்த இளைஞர்கள், ”ராமர் கோவில் கட்டும் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம்” என இந்தியில் கோஷம் எழுப்பி உள்ளனர்.   விழாவை நடத்தியவர்கள் ஒவ்வொரு முறை கோஷம் எழுப்பும் போதும் இளைஞர்களை கெஞ்சி அமர வைத்தனர்.

ஆயினும் கோஷம் எழுப்புவது நிற்கவில்லை.   ராஜ்நாத் சிங் இதனால் எரிச்சல் அடைந்து அமைதியாக இருந்தால் மட்டுமே தாம் உரையாடுவதை தொடர்வதாக மிரட்டிய பிறகு அங்கு அமைதி நிலவியது.