குஜராத்தில் 110 இடங்களில் வெற்றிபெறுவோம்: அகமது பட்டேல் உறுதி

அகமதாபாத்,

குஜராத் மாநில சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று வாக்களித்த குஜராத் மாநில காங்கிரஸ் எம்.பி.யான அகமது பட்டேல் கூறும்போது, குஜராத்தில் காங்கிரஸ் 110க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள  182 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இன்று முதல்கட்டமாக  89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  2-ம் கட்டமாக 14-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில்,  இன்று வாக்குப்பதிவு  நடைபெறும் இடங்களில்  பெண்கள் மற்றும் இளைஞர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகத்துடன் வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.

குஜராத் மாநில காங்கிரஸ் எம்.பியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  அகமது பட்டேலும் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அவர், பரூச் மாவட்டத்தில் உள்ள அங்க்லேஷ்வர் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்  நிச்சயம் வெற்றி பெறும். குஜராத்தில் 110க்கு மேற்பட்ட இடங்களில்  வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என்று   நம்பிக்கையுடன் கூறினார்.