பாஜக முதல்வர்களை எழுப்பி விட்டோம் ஆனால் பிரதமர் தூங்குகிறார் : ராகுல் காந்தி

டில்லி

பாஜக ஆளும் குஜராத் மற்றும் அசாம் மாநில முதல்வர்களை எழுப்பிய போதிலும் பிரதமர் தூங்குகிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி செய்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைத்த உடனே விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதை ஒட்டி மத்தியப் பிரதேசத்தில் முதல் பணியாக ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதே போல் சத்திஸ்கர் மாநிலத்திலும் ரூ. 6100 கோடி மதிப்புள்ள விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து பாஜக நடவடிக்கை எடுக்காததால் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சியை பின்பற்றி பாஜக ஆளும் அசாம் மற்றும் குஜராத் மாநில முதல்வர்கள் விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “காங்கிரஸ் குஜராத் மற்றும் அசாம் மாநில பாஜக முதல்வர்களை எழுப்பி விட்டது. ஆனால் பிரதமர் மோடி இன்னும் தூங்கிக் கொண்டு இருக்கிறார். மோடியையும் விரைவில் தூக்கத்தில் இருந்து எழுப்புவோம்” என பதிந்துள்ளார்.