விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டம் தொடரும்- அமைச்சர்

சென்னை:

மிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, இலவச மின்சாரம் எப்போதும் போல தொடரும் என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க மின்சார துறையில் தனியார் மயமாதலை மத்திய நிதி துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் நாடு முழுக்க ஒரே மாதிரியான கட்டண முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நாடு முழுக்க பல மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக முதல்வர் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மின் பகிர்மானம், கட்டணம், மின் உற்பத்தி என நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்நிலையில், விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மின்மீட்டர் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், மின்மீட்டர்கள் பொருத்துவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்றும் விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செல்கிறது என அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு தரும் போது மீட்டர் பொருத்துவது 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.