“பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்”… ஸ்டாலினுக்கு அமைச்சர் அறிவுரை

--

சென்னை:

“பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலி னுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுரை கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதுகுறித்து, திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டிருந்தார்.

அதில்,  அரசின் தவறுகளால் மாநிலம் முழுக்கவும் #Covid19; முதல்வரின் குழப்பங்களால் எங்கெங்கும் நிதி நெருக்கடி! பல்துறை வல்லுநர்களுடன் உரையாடினேன். தமிழகத்தை மீட்க உதவும் அவர்தம் ஆலோசனைகளை @CMOTamilNadu கவனத்திற்கு பொறுப்புள்ள எதிர்கட்சியாகக் கொண்டு வருகிறேன்.தமிழகத்தைக் காப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு இன்று திருவொற்றியூர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

மறைந்த திமுக நிர்வாகி பலராமன் படத்திறப்பு நிகழ்வின் போது, முகக்கவசம் அணியாமல் ஸ்டாலின் பங்கேற்றிருந்ததாகவும், அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன் அவர் முன்னுதாரணமாக பொறுப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.

ஏற்கனவே ஸ்டாலின் டிவிட்டுக்கு பதில் டிவிட் போட்டுள்ள அமைச்சர், பொறுப்புள்ள எதிர்க்கட்சின்னுலாம் அப்புறமா பேசலாம். முதல்ல பொறுப்புள்ள குடிமகனா முகக்கவசம் மாட்டுங்கஎன்று பதிலளித்துள்ளார்.”

திமுகவின் முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளரும், அக்கட்சியின் தணிக்கை குழு உறுப்பினருமான எல். பலராமன் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனன்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது படமானது அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது அவர் முகக் கவசம் அணியாமல் இருந்தார்.அதை சுட்டிக்காட்டி அமைச்சர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.