சென்னை: சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளது, காலம் கடந்த அறிவிப்பு என்றாலும் இந்த அறிவிப்பின் மூலம் கொரோனா அதிக அளவில் சென்னையில் பரவி வருகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது: தினசரி செய்தியாளர்களை டிஎம்எஸ் வளாகத்தில் சந்திக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முகக்கவசத்தை அணியாமல் தான் வழக்கமாக பேட்டியளிக்கிறார். பேட்டியளிக்கும் போது வார்த்தை உச்சரிப்பு சரியாக எதிரொலிக்காது என்பதற்காக முகக்கவசம் அணிவிக்கவில்லை யொன்று வாதத்திற்கு சொன்னால் கூட, முதலமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டவர்கள் பேட்டியளித்த போது முகக்கவசம் அணிந்துக் கொண்டு தானே செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஆனால் சுகாதாரத் துறை செயலாளர் முகக்கவசம் அணிவிக்காமல் செய்தியாளர்களை கூட்டமாக அழைத்து புள்ளி விவரங்களை தெரிவிக்கிறார். அப்பொழுது ஒருவர் முலம் இன்னொருவருக்கு பரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதுதான் பொது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களை அறிக்கையாகவே செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பலாம். அதோடு மட்டுமின்றி அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் கிடையாது தேவைப்பட்டால் துணியால் முகத்தை மூடி கொள்ளலாம்என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், மாநகராட்சி ஆணையர் முகக்கவசம் அனைவரும் அணிவது கட்டாயம் என்று கூறுகிறார், சாதாரண மக்களால் எப்படி வாங்க முடியும், அப்படி வாங்க சென்றால் வெளியே வரவண்டும், கடைகளில் கிடைப்பது கிடையாது, எனவே வாரம் தோறும் குடும்ப எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே விலையில்லாமல் ரேஷன் கடைகள் மூலம் வழங்காலமே என்று தெரிவித்துள்ளனர்.