வார ராசிபலன்: 26.6.2020 முதல்  2.7.2020 வரை!  வேதாகோபாலன்

மேஷம்

எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க. போனவை எல்லாம் வரும். திருமணத் தடை சீக்கிரம் நீங்கும். திருப்தியாகத்தான் இருப்பீங்க. உங்கள் மன சாட்சிக்கே தெரியும். நியாயமாகக் கிடைக்க வேண்டியது குறைவின்றிக் கிடைக்கிறதே! பிறகெதற்குப் புலம்பலாம்? குடும்பத்தலைவி/ தலைவர்களே,.. அச்சம் தவிருங்க. வெளியூர் வெளிநாடு என்று  சுத்தியடிச்சுக்கிட்டிருந்தவர்களுக்குத் தாய்நாடு திரும்ப ஆசை ஏற்பட்டால் அதற்கான முயற்சிகளில் நிறைவேறவில்லை என்று அழாத குறையாய்க் கவலைப்பட்டீங்க. வெயிட்.. விரைவில் நல்லபடியா  ஈடேறும். கடன்களை முடிச்சுட்டீங்களே வாழ்த்துகள். முடிக்காதவங்க முனைந்தால் முடிஞ்சுடுமே! மனதில் விரக்தி நிலவ அனுமதிக்காதீங்க. கவர்ச்சி அம்சம் கூடுதலாகும். மீட்டிங்குகளில்  கைத்தட்டல் வாங்குவீங்க.

சந்திராஷ்டமம்: ஜூலை 1 முதல் ஜூலை 3 வரை

ரிஷபம்

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் வளர்ச்சி காண்பீங்க. உத்தி யோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கணுங்க. கல்யாணம் காட்சின்னு சென்ட் போட்டுக்கிட்டுக் கிளம்ப இப்போதைக்கு ஆசை வேண்டாங்க. எனினும் குடும்பத்தில் ஒரு சின்ன சைஸ் மேளமாவது கொட்டும். அதாகப்பட்டது… காது குத்தல்.. பர்த்டே பார்ட்டி.. எக்ஸெட்ரா… நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் பகைவர்களைப் பார்த்து பயப்படவும் வேண்டாம். இரண்டும் தலைகீழாகப் போகுது.  எப்பவுமே ஒரு ஜாக்கிரதை உணர்ச்சியோட வளைய வந்துட்டீங்கன்னா பிரச்சினையே இருக்காது பாத்துக்குங்க. இப்படிச்செய்வதன் மூலம் இப்ப உள்ள நிம்மதியை அதிகரிச்சுக்குங்க.

மிதுனம்

மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். தெய்வப் பணிகள் நிறைவேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடப்பதற்கான பேச்சு வார்த்தை நல்லபடியா முடியும். வாழ்க்கை வசதிகள் பெருகும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பாங்க. ஆரோக்ய விஷயத்தில்.. குறிப்பாய்ச் சொன்னால் .. சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டால் போதுமுங்க. ஆரோக்யம் சூப்பரா இருக்கும். தம் அடிக்கவோ தண்ணி போடவோ நண்பர்கள் வற்புறுத்தினால் அவர்கள் நண்பர்கள் அல்ல எதிரிகள் என்பதை போல்டான எழுத்தில் போட்டு, ஹைலைட் செய்து கண்ணில்படும் இடத்தில் ஒட்டி வெச்சுடுங்க. பின்ன என்னங்க? கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன். கஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பவன் அல்ல என்பதை அவங்க மறக்கலாம். நீங்க மறக்கக்கூடாது.

கடகம்

எத்தனையோ பெரிய சுறாக்களைச் சந்தித்து நீந்தி வந்துட்டீங்க. அரை அங்குல மீனைப் பார்த்து பயப்படறீங்களே? “டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி”.  அலுவலகத்தில் வெளியூர் வெளிநாடுன்னு ஆசை காட்டினாங்க.  இப்ப அது இல்லைன்னு ஆயிடுச்சு. ஆனாலும் வேறு ஈடுபாடுகள் காரணமா மனதில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும். எனினும் கூடவே தேவையில்லாத பதற்றமும் டென்ஷனும்கூட இருக்கும். பாதி நீங்களே ஏற்படுத்திக்கொள்வது. காலப்போக்கில் சஞ்சலங்கள் விலகுமுங்க. நண்பர்களால் நன்மையும் லாபமும் ஏற்படும். அவங்களோட உதவி அதிகமாகக் கிடைக்கும். அரசாங்க நன்மைகள் கிடைக்கும்.  கணவரால்/ மனைவியால் நன்மை ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவாங்க. வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடிவரும். கூட்டுத்தொழில் லாபம் தரும்

சிம்மம்

பண வரவு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். பை த வே .. திருமணம் நிச்சயமாகாமல் இப்படியும் அப்படியும் கண்ணாமூச்சி காட்டினாலோ.. ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடைப்பட்டுவிடுமோ என்ற டென்ஷன் ஏற்பட்டாலோ.. பயமே வேண்டாம். எல்லாம் சிறிது காலத்தில் மிக நல்ல முறையில் நடந்தேறி உங்களை மகிழ்ச்சிக்கடலில் தூக்கிப்போடும்.  அநாவசியமாய்க் கவலைப்பட்டு நிம்மதியை இழக்காதீங்க. கலைத் துறையில் உள்ளவங்க மேலும் அதிக வெற்றிகளை சுவைக்கப் போறீங்க. குழந்தைக்காகக் காத்திருக்கறவங்களுக்கு வாரக் கடைசியில் நல்ல செய்தி  உண்டு. நீங்க முழுமனசோட கார்டைத் தேய்க்கத் தேய்க்க மகாலட்சுமி கஜானாவை நிரப்பிடுவாள்.

கன்னி

அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களின் வளர்ச்சி கொஞ்சம் ஸ்லோவாய்த்தாங்க இருக்கும். உத்தி யோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். அலுவலகத்தில் ஏற்படவிருந்த பெரிய நஷ்டம் ஒன்று உங்க புத்திசாலித்தனமான அணுகுமுறையால் தீர்ந்துவிடும். எனவே பாராட்டும் மேலிடத்து ஷொட்டும் கிடைக்கும். அமைதியை இழக்காத உங்களின் அணுகுமுறையால் பல  வெற்றிகளை அடைவீங்க, அதே சமயம் கற்பனை பிரச்னைகளால் டென்ஷன் ஆகி அமைதியை/ ஆரோக்யத்தைக் கெடுத்துக்கா தீங்கன்னு மென்ஷன் செய்ய வேண்டிய கடமை என்னுடையது.

துலாம்

பெண்களால் நலம் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பிறரிடம் அன்புடன் பழகுவீங்க. அதனால் அவர்களது ஆதரவைப் பெறுவீங்க. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவங்க வளர்ச்சி காண்பீங்க. ஆடை, அணிமணிகளால் லாபம் கிடைக்கும். போக்குவரத்து இனங்களால் ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டுத் தொடர்பு மூலம் செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். வெற்றி சின்னதாயிருக்கேன்னு முகத்தைத் தூக்கி வைச்சுக்காதீங்க. எடுத்த எடுப்பில் எல்லாமே வெற்றிகரமாய் முடியுதே அதுக்கே பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க வேண்டாமோ! கடுமையான முயற்சிக்கும் உழைப்புக்கும் ரெடியா? கம் ஆன்.

விருச்சிகம்

உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். திறமைக்குரிய பயனைப் பெற்று வருவீங்க. பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். குரு பலம் இல்லாததால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். பெரியவங்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கையை வளர்த்துக்  கொள்ள ஏதாவது கோர்ஸ் இருந்தால் சேர்ந்துக்குங்க. பின்ன என்னங்க? உங்களுக்கில்லாத திறமையா? உங்களால் எத்தனை பேரை பீட் பண்ண முடியும்? ஆனாலும் மனசுக்குள் தேவையே இல்லாத ஒரு தாழ்வு மனப்பான்மை எதுக்காம்? அதனாலதான் சொன்னேன். புலம்பலை நிறுத்துங்க. உங்களால்  சாதிக்க முடியாமலா போகும்? அப்புறம் அசடு வழிய வேண்டாம்,

தனுசு

கல்விக்காக நிறைய செலவை செய்வீங்க.  அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம் மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். தெரிந்தவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். ஏன் முன்பின் தெரியாதவங் களின் கல்வியாகக்கூட இருக்கலாம். எதுவாயினும் அது உங்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும் என்பது ஹண்ட்ரட் சதவீதம் உறுதி. தைரியமா இருங்க. உங்களுக்கு எது அவசியம் எது அநாவசியம்னு கரெக்ட்டாய்த் தெரியும். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத நன்மை ஒன்று  வாரக் கடைசியில் கிடைக்கும். அது மட்டுமில்லைங்க.. புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க. கொஞ்சம் எதிர்ப்புக்கள் இருக்கும். ஆகவே எக்காரியத்திலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது. ஸ்டூடன்ட்ஸ்க்கு முன்னேற்றமான போக்கு தென்படும். ஆசிரியர்களிடம் பணிவு தேவை.

மகரம்

வாழ்க்கை வசதிகள் கூடும். முக்கியப் பதவிகளும் பொறுப்புக்களும் வந்து சேரும். அரசு உதவி கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு அவற்றில் வெற்றியும் பெறுவீங்க. திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். அடேயப்பா. வாழ்க்கையில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்திருப்பீங்களா நீங்க. பரவா யில்லையே. இப்ப செய்வதும் எதுவும் வேஸ்ட் இல்லைங்க. நியாயமான செலவுதான். மகிழ்ச்சியையும் நிம்மதியையும் புண்ணியத்தையும் கல்வியையும் தரக்கூடிய செலவுங்கதான். எனவே அடிச்சுவுடுங்க. கடந்த ஒன்றரை வருடங்களாக ஏதாவது ஒரு வகையில் சிறிய அல்லது பெரிய பிரச்சனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்த உங்களுக்கு நிம்மதி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே மறந்த போயிருந்தது. இப்போதான் அது நினைவுக்கு வரும்!

சந்திராஷ்டமம்: ஜூன் 25 முதல் ஜூன் 27 வரை

கும்பம்

சில வழிகளில் பணம் வந்து சேரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். புதிய துறைகளில் முதலீடு செய்வீங்க. சேமிப்பு வளரும். கிரகப் பிரவேசம் செய்ய வாய்ப்பு உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் அதிக லாபமும் கிடைக்கும். சிரமங்கள் குறைந்து ஜாலியா இருப்பதற்கான சந்தர்பபம் உங்களைத் தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே/ சுகமே. மை டியர் பெண்களே.. தொட்டிலுக்கு அழகான டிசைனில் புதுத் தோரணம் கட்டி வையுங்க. குட்டி பாப்பா உங்க வீட்டுக்கு வரப்போகுது. அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகள் ஆக்கம் தரும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 27 முதல் ஜூன் 29 வரை

மீனம்

நீங்க பேசும் வார்த்தைகள் வரிக்கு வரி பலிக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பீங்க. ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் மதிப்பு உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவங்க முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பீங்க. நண்பர்களால் நன்மை நிறைய ஏற்படும்.  அதிலும் குறிப்பா எதிர்பாலினத்து நண்பர்கள் மூலம்.. வாழ்க்கையில் சந்தோஷமான திருப்பு முனை உண்டுங்க. அது திருமணமாகவும் இருக்கலாம் .. காதலாகவும் இருக்கலாம்  இரண்டுமே இல்லையாங்க? அப்படியென்றால் புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க. அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. சாப்பிட தூங்க நேரம் இல்லைன்னு அலம்பல் செய்யாதீங்க. (அனேகமாய் மாட்டீங்க என்றாலும் ஒரு வார்த்தை சொல்லி வெச்சுடலாமேன்னு…)

சந்திராஷ்டமம்: ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை

கார்ட்டூன் கேலரி