அர்ஜூனா விருதை போராடி வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு..!

புதுடெல்லி: தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதைப் பெறுகிறார் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு.

இவர் காமன்வெல்த் போட்டிகளில், பளு தூக்குதலில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் இவரின் பெயர் நீக்கப்பட்டதையடுத்து, அதனை எதிர்தது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சஞ்சிதா.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இவரின் பெயரைப் பரிசீலிக்குமாறு தேர்வுக் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததுடன், இவர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை, முடிவை வெளியிடாமல் வைத்திருக்குமாறும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது இவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி, இவருக்கு 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது என்ற கவுரவம் கிடைத்துள்ளது.