Random image

சிபிஐ சோதனை வரவேற்கத்தக்கது: திமுக பொருளாளர் துரைமுருகன்

வேலூர்:

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சிபிஐ சோதனை வரவேற்கத்தக்கது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரி கள் கூட்டணி அமைத்து, லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு, திருட்டுத்தனமாக தமிழகம் முழுவதும் குட்காவை விற்பனை செய்து வந்தனர்.

இதுகுறித்து திமுக உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில், எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணையின்போது, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ. வீட்டில்,  சசிகலா தங்கியிருந்த அறையில் இருந்து, குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டதாக  வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து இருந்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது  விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்ட ஜெயக்கொடியை எடப்பாடி தலைமை யிலான அரசு கடந்த  ஜனவரி மாதம்  மாற்றி, அவருக்கு பதிலாக  லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக மஞ்சு நாதாவை  விசாரணை அதிகாரியாக  நியமனம் செய்தது. பின்னர் அவருக்கும் மாற்றப்பட்டார்.

இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், குட்க ஊழல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் பிரபல குட்கா வியாபாரி ஒருவரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வந்தது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் அவர்களின் உறவினர்களின் வீடுகள், குட்கா ஊழலில் சிக்கி உள்ள சுகாதாரத் துறை, காவல்துறை  அதிகாரிகள் வீடுகள் உள்பட சுமார் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன்,  “குட்கா முறைகேடு தொடர்பான நடவடிக்கை தாமதமாக நடத்தப்பட்டாலும் சிபிஐ சோதனை வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். மேலும், மு.க.அழகிரி பேரணி தொடர்பான கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்து  “நோ கமெண்ட்ஸ்” என கூறிவிட்டு எஸ்கேப்பானார்.