ஐதராபாத்:

தேவைப்பட்டால் பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று தெலுங்குதேச கட்சி எம்பி ஜெயதேவ் கால்லா தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பாஜக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, கூட்டணி முறிவு குறித்து பேசி வருகிறது. ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறி வந்தது.

கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்க அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற செயல்பாடு முடங்கியது.

இந்நிலையில் தெலுங்கு தேச கட்சி எம்பி ஜெயதேவ் கால்லா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கால நிர்ணயத்துடன் கூடிய செயல் திட்டத்தை பாஜக அறிவிக்க வேண்டும். ஆந்திராவுக்கு நிலுவையில் உள்ள மறு சீரமைப்புக்கான 19 திட்டங்களை எப்படி நிறைவேற்ற போகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது இது அரசியல் கூட்டணி என்ற பிரச்னையோ? அல்லது வேறு எந்த பிரச்னையோ? கிடையாது. ஆந்திரா மக்கள் உரிமைக்கான பிரச்னை. அது தான் எங்களது தேவை. இதற்காக நாங்கள் கூட்டணி முறிவு போன்ற எத்தகைய விபரீத முடிவுகளை எடுக்க தயாராக உள்ளோம்’’ என்றார்.