கிணறு விவகாரம்: ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக அரசு துறை! பொதுமக்கள் கொந்தளிப்பு!

தேனி,

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனது நிலத்தில் பெரிய ஆழ்துளை கிணறுகளை வெட்டியுள்ளதால், அந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையினரும் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கிராம மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரச்சினைக்குரிய கிணற்றை, பொதுமக்களுக்கு தந்துவிடுவதாக கூறிய ஓபிஎஸ், பின்னர் அதை தனது நண்பர் சுப்புராஜ் என்பவருக்கு விற்றுவிட்டார்.

இதன் காரணமாக ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள சிறிய ஆறான, ‘வரட்டாறு’ஐ,  ஒ.பி.எஸ்.க்கு ஆதரவாக ‘ஓடை’ என  மாற்றி அரசு பதிவேட்டில் மாற்றம் செய்த பொதுப்பணித்துறைக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுப்பணித்துறையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் பொதுப்பணித்துறை யினர் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருதரப்பினரிடையே பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ்., தரப்பில் பட்டா நிலத்தில் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஓபிஎஸ்சின்  கிணற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அதை கிராமத்தினருக்கும், அதிகாரிகள் தரப்புக்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது,  அதிகாரிகள் ஒருதரப்பிற்கு மட்டும், ஆதரவாக பேசுவதாக கிராமத்தினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.