குடியுரிமை சட்டம் எதிர்ப்பு: பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களை மிரட்டிய பாஜக எம்எல்ஏ

பெல்லாரி: இந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர், பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று பாஜக எம்எல்ஏ சோமசேகரா ரெட்டி இஸ்லாமியர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாஜக பதிலடி கொடுத்து வருகிறது. நாடு முழுவதும் குடியுரிமை சட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்து இருக்கிறது.

இந் நிலையில், இந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர், பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று பாஜக எம்எல்ஏ சோமசேகரா ரெட்டி இஸ்லாமியர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக  கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக எம்எல்ஏ சோம்சேகர ரெட்டி பங்கேற்று பேசியதாவது:

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை. இந்த தேசத்தில் நாங்கள் 80 சதவீதம் இருக்கிறோம், முஸ்லிம்களாகிய நீங்கள் 17 சதவீதம்தான் இருக்கிறீர்கள்.

இப்போது இங்கு கூடியிருப்பவர்கள் 5 சதவீதம் பேர் தான். 100 சதவீதம் பேர் வந்தால் அவ்வளவு தான். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உங்கள் நிலைமை என்னாகும் என்று.

காங்கிரசார்கள் முட்டாள்கள். ஆனால் நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள்? தெருக்களில் இறங்கி போராடுகிறீர்கள். நாங்கள் 80 சதவீதம் பேர் உள்ளோம். நீங்களோ 17 சதவீதம் தான் இருக்கிறீர்கள். நான் யாரையும் எதிர்த்தோ, தாழ்த்தியோ பேசவில்லை.

ஆனால் சேதப்படுத்துவதை நாங்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று பேசியிருக்கிறார். இதற்கு பதிலளித்த காங். முன்னாள் எம்பி உகரப்பா, பாஜகவின் மனநிலையே இதுதான். இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் தண்டிக்கத்தக்கது என்றார்.