கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், முற்பகல் 11.30 மணி வரை சுமார் 33.98 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குவங்க மாநிலத்தில், இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று  4-வது கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி நடைபெறுகிறது.

இன்றைய வாக்குப்பதிவானது 44 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி,  ஹவுரா (9 தொகுதிகள்), தெற்கு 24 பர்கானாக்கள் (11 தொகுதிகள்), அலிபுர்துவார் (5 தொகுதிகள்), கூச்பெகர் (9 தொகுதிகள்), ஹூக்ளி (10 தொகுதிகள்)  எ ன மொத்தம் 44 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் தேர்தலில் பல்வேறு முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக டோலிகஞ்ச் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ, பா.ஜனதா எம்.பி.க்கள் லாக்கட் சட்டர்ஜி, நிதிஷ் பிரமாணிக் போட்டியிடும் முறையே சுச்சுரு, தின்கட்டா தொகுதிகளும் முக்கியமான தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதுபோல திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ரஜிப் பானர்ஜி உள்ளிட்டோரும் இன்றைய தேர்தலில் பிரபலங்களாக கருதப்படுகின்றனர்.

வாக்குப்பதிவு காரணமாக சில இடங்களில் மோதல்கள் நடைபெற்றாலும், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், காலை 11.30 மணி வரை சுமார் 33.98 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.