மே. வங்காள மாநிலத்தில் இடதுசாரிகளுடனான கூட்டணியை இறுதி செய்த ராகுல் காந்தி

 

புதுடெல்லி :

மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதனை டெல்லியில் நேற்று தெரிவித்த மே.வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை” என குறிப்பிட்டார்.

“தொகுதி பங்கீடு குறித்து இடதுசாரிகளுடன் கலந்து ஆலோசிப்போம்” என அவர் கூறினார்.

இந்த கூட்டணியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இறுதி செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மே.வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதின் பிரசாதா ஆகியோருடன் ராகுல் காந்தி முதல் கட்டமாக பேச்சு நடத்தி, இது தொடர்பாக கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இடதுசாரிகளுடனான கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 76 தொகுதிகளில் வென்றனர்.
ஆனால் மக்களவை தேர்தலில் தனித்தனியாக நின்று தோல்வி அடைந்தனர்.

– பா. பாரதி