கேஸ் ஏஜன்சி வாங்கி தருவதாக மோசடி செய்த பாஜக தலைவர் கைது
கொல்கத்தா
மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவர் எரிவாயு ஏஜன்சி வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநில பாஜகவின் தலைவர்களில் ஒருவர் ரணஜித் மஜும்தார். இவர் பாஜகவின் மத்திய அரசின் மேற்கு வங்க பிரதிநிதியாக பதவிவ் அகித்து வந்தார். இவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர தம்மை அணுகுமாறு பதிந்திருந்தார். அதை ஒட்டி பலரும் அவரை அணுகினார்கள். அவ்வகையில் அவர் பெரும் தொகையை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அந்த சர்ச்சை அடங்கும் முன்பே மற்றொரு சர்ச்சை தொடங்கியது. ரணஜித் எரிவாயு ஏஜன்சி வாங்கித் தருவதாக பாஜக தொண்டர்கள் பலரிடம் இருந்து பணம் வாங்கி விட்டு அவ்வாறு வாங்கித் தராமல் இருந்துள்ளார். இது குறித்து பாஜகவினர் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் புகார் அளித்தனர். விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் தியாகிகள் தின உரையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த எரிவாயு ஏஜன்சி மோசடி பற்றி குறிப்பிட்டு மேற்கு வங்க காவல்துறையினர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை ஒட்டி காவல்துறையினர் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து இது குறித்து விசாரித்து வந்தது.
விசாரணையில் ரணஜித் தலைமையில் பல பாஜகவினர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்தது. இந்த தகவல் பெட்ரோலிய துறை அமைச்சரிடம் அளிகப்பட்டுள்ளது. ஏற்கனவே ரணஜித் தனது லெட்டர் பேடில் அமைச்சரிடம் 235 பாஜக தொண்டர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு எரிவாயு ஏஜன்சி வழங்க பரிந்துரை செய்துள்ளதை பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதை ஒட்டி கொல்கத்தா நகர காவல்துறையின் சிறப்பு விசாரணை குழு ரணஜித் மஜும்தாரை கைது செய்துள்ளது. இந்த மோசடியில் மேலும் பல பாஜக தலைவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. சிறப்பு விசாரணைக் குழு அதை குறித்து தீவிரமாக விசாரித்து வருவதால் மேலும் கைதுகள் தொடரும் என சொல்லப்படுகிறது.