கொல்கத்தா

பாஜக இளைஞர் அணி தலைவி பமேலா கோஸ்வாமி 100 கிராம் போதை மருந்தை தனது காரில் எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பமேலா கோஸ்வாமி என்னும் பெண் விமானப் பணிப்பெண்ணாக பணி புரிந்தவர் ஆவார்.  அதன் பிறகு அவர் மாடலாகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.  கடந்த 2019 ஆம் வருடம் இவர் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு ஹூக்ளி மாவட்டத்தின் இளைஞர் அணி பொதுச் செயலராக பதவி அமர்த்தப்பட்டார்.

இவர் தனது உதவியாளரும் பாஜக இளைஞர் அணி பிரமுகருமான பிரபிர் குமார் டே என்பவருடன் நேற்று மாலை தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார்.  இவர்களுடன் கோஸ்வாமியின் பாதுகாவலரும் உடன் இருந்துள்ளார்.  அப்போது காவல்துறையினர் இவரது காரை நிறுத்தி சோதனை இட்டுள்ளனர்.  அந்த சசோதனையில் காரிலும் கோஸ்வாமியின் பர்சிலும் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கோகைன் என்னும் போதைப் பொருள் சிக்கி உள்ளது.

இதையொட்டி பமேலா, பிரபிர் குமார் மற்றும் பாதுகாவலர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களை காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு கூட்டிச் செல்லும் போது தம்மை வேண்டுமென்றே கைது செய்துள்ளதாக பமேலா கூச்சல் இட்டுள்ளார்.   இதை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.    பமேலா வந்த கார் வெகு நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை சிசிடிவி மூலம் கண்டதால் தாங்கள் காரை கண்காணித்ததாக கூறி உள்ளனர்.

மேலும் பமேலா மற்றும் பிரபிர் குமார் இந்த காரில் வெகு நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தி அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் அவர்களிடம் எதையோ அலித்துள்ளதாக காவல்துறையினர் கூறி உள்ளனர்.  எனவே சந்தேகத்தின் பேரில் அந்த காரை தொடர்ந்து சோதனை இட்டபோது போதைப் பொருள் கிடைத்ததாகவும் அதன் எடை சுமார் 100 கிராம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவல் வெளியானதும் பல பாஜக தலைவ்ர்கல் சமூக வலைத் தளங்களில் பமேலாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

திருணாமுல் காங்கிரஸ் தலைவ்ர்களின் ஒருவரான சந்திரிமா பட்டாசார்யா, “மேற்கு வங்கத்தில் இது  போன்ற நிகழ்வுகள் நடந்ததற்கு நான் அவமானம் கொள்கிறேன்.  பாஜகவினருக்கு இது புதியது இல்லை.  ஏற்கனவே சில பாஜக தலைவர்கள் குழந்தைகளை கடத்திய வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவார்கள்” என தெரிவித்துள்ளார்.