மேற்கு வங்க இடைத் தேர்தல் : தேசிய குடியுரிமை பட்டியலால் பயனடைந்த திருணாமுல் காங்கிரஸ்

டில்லி

மேற்கு வங்க இடைத்தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதற்கு  தேசிய குடியுரிமை பட்டியல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக இரு இடங்களிலும் திருணாமுல் காங்கிரஸ் 34 இடங்களிலும் வெற்றி பெற்றன.   ஆனால் இந்த வருடம் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 18 இடங்களிலும் திருணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.   அதாவது முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவுக்கு 16 இடங்கள் அதிகரித்து திருணாமுல் காங்கிரசுக்கு 12 இடங்கள் குறைந்துள்ளன.

தற்போது மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.   ஆனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பேரிடியை அளித்துள்ளன.  இடைத் தேர்தல் நடந்த காலியாகஞ்ச், காரக்பூர் மற்றும் கரிம்பூர் தொகுதிகளில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  இதில் காரக்பூர் மற்றும் காலியாகஞ்ச் தொகுதிகளில் இக்கட்சி முதன்முறை வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, “எங்கள் கட்சி தொடங்கி 21 ஆண்டுகளாக நாங்கள் காரக்பூர் மற்றும் காலியாகஞ்ச் தொகுதிகளில் வெற்றி பெற்றது இல்லை.   இந்த வெற்றிக்கு நான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   எங்கள் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இந்த வெற்றிக்குக் கடுமையாக உழைத்தனர்.   அத்துடன் எங்கள் தொண்டுக்கு மக்கள் மதிப்பு அளித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோசடி நடந்த போதிலும் நாங்கள் இரு தொகுதிகளில் வென்று  கரீம்பூர் தொகுதியில் இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.  தேசிய குடியுரிமைப் பட்டியல் என்னும் பெயரில் பாஜக மக்களைப் பயமுறுத்தி உள்ளது.  வங்க தொழிலாளர்கள் ராஜஸ்தான், காஷ்மீர், மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.   இளைஞர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு இல்லை. இவ்வாறான பாஜகவின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்”எனத் தெரிவித்துள்ளார்.

காலியாகஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் கமல் சந்திர சர்க்கார், “தேசிய குடியுரிமை பட்டியல் எங்களுக்கு பேரிடியை அளித்துள்ளது.  இது எங்கள் பலவீனமாகி விட்டது.  மக்கள் இந்த விவகாரத்தினால் பயம் அடைந்துள்ளதை நாங்கள் தற்போது உணர்ந்துக் கொண்டோம். நாங்கள் இந்த விவகாரம் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த வில்லை” எனத் தெரிவித்துள்ளார்.