மேற்குவங்கம்: இடைத்தேர்தலுக்கு பாஜக அறிவித்த வேட்பாளர் போட்டியிட மறுப்பு

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் நோபரா சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பாஜக வேட்பாளராக மஞ்சு பாசு என்பவர் அறிவிக்கப்பட்டார். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்ல்ஏ.

இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சியடைந்த மஞ்சு தான் திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவதாகவும், மம்தாவின் உண்மையான தொண்டர்களில் நானும் ஒருத்தி. மம்தா மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது’’ என்று கூறி பாஜக அளித்த வாய்ப்பை நிராகரித்தார். இச்சம்பவம் மேற்கு வங்க பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘ பாசு எங்களது கட்சியில் உறுப்பினராக இணைய டோல் ஃப்ரி நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தார். ஆனால், அவர் பாஜக.வில் இணைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை’’ என்று தெரிவித்தனர்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் பாஜகவில் இணைந்தார். இவருடன் மஞ்சு பாசு மிகவும் நெருக்கமாக இருந்தார். கடந்த சில தினங்களாக இவர் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிட மஞ்சுவுக்ககு திரிணமுல் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துவிட்டது. இக்கட்சி சார்பில் சுனில் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் அவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ‘‘எந்த கட்சியில் இருந்தும் எனக்கு வாய்ப்புகள் அளிக்கப்படலாம். ஆனால் அதை ஏற்பதா? வேண்டாமா? என்பது எனது தனிப்பட்ட முடிவாகும்’’ என்றார் மஞ்சு பாசு.