மேற்குவங்கத்தில் கூட்டாட்சி அணி பொதுக்கூட்டம்….எதிர்கட்சிகளை அழைக்க மம்தா டில்லி வருகை

கொல்கத்தா:

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் ஜனவரி 19ம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்ட ‘‘கூட்டாட்சி அணி’’ பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வரும் 31ம் தேதி அவர் டில்லி வருகிறார். இந்த வருகையின் போது மாநில கட்சிகள், எதிர்கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து கூட்டாட்சி அணிக்கு ஆதரவு கோருகிறார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வை வீழ்த்த அவர் வியூகம் வகுத்து வருகிறார்.

டில்லியில் 31ம் தேதி கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் ஆகஸ்ட் 1ம் தேதி டில்லி ஸ்டீபன் கல்லூரியில் நடக்கும் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மம்தா பேசுகிறார். இதற்காக டில்லி வரும் அவர் எதிர்கட்சி தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில்,‘‘மம்தா பாஜக.வுக்கும், மத அமைப்புகளுக்கு எதிராக போராடி வருவது அனைவரும் அறிந்த விஷயம். அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து இதர கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது ஜனவரி மாதம் நடக்கும் கூட்டாட்சி அணி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுப்பார்’’ என்றார்.