தலைமறைவு நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம்

கொல்கத்தா:

தலைமறைவு நீதிபதி கர்ணனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த கர்ணனின் கருத்தை எதிர்த்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே நீதிமன்ற அவமதிப்பு விசாரணையின் போது நீதிபதி கர்ணனனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மன நலம் சரியில்லை அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் பதில் “உத்தரவு” பிறப்பித்தார்.

இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் கர்ணன் பலமுறை மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த அத்தனை மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இன்று அவர் பணி ஓய்வு பெற்றார்.

அவருக்கு உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டதில் இருந்து தலைமறைவாகவே இருக்கிறார். அவர் தமிழகத்தில்தான் எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்று மேற்கு வங்க காவல்துறை கருதுகிறது.

இதையடுத்து கர்ணனை கண்டுபிடிக்க தமிழக காவல் துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். இதனால் தேடுதல் வேட்டை உடனடியாக ஆரம்பமாகும் என்று காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.