கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் நேற்று முதல்வர் மம்தாவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சரியான சிகிச்சையின்றி அவதிப்பட்ட பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர். எஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 10-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், அவரது மரணத்துக்கு காரணம் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர்களை, மரணம் அடைந்த நோயாளியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.

இதன் காரணமாக கடந்த  கடந்த 11-ம் தேதி முதல் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் முழுவதும் பரவிய இந்த போராட்டத்துக்கு பல மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், போராட்டத்தை கைவிடும்படி மருத்துவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை விடுக்க, பிரச்சினை மேலும் பூதாகாரமானது.

இதையடுத்து, மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய மருத்துவர் சங்கமும் போராட்டத்தில் குதித்தது. அதன்படி நேற்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது பணிகளை செய்தனர்.

இதனிடையே பேச்சுவார்த்தைக்கு வருமாறு மருத்துவர்களுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்களுக்கு  அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று மேற்குவங்கத்தில் உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து தலா இரு பிரதிநிதிகளும், சுகாதாரத்துறை பேருந்தின் மூலம் கொல்கத்தா தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஊடகங்கள் முன்னிலையில் மருத்துவ பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, பணியிட பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர் குறை தீர்ப்பு மையங்கள் அமைக்க வேண்டும், காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரை குறை தீர்ப்பு மைய நடுவராக நியமிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்பதாக மம்தா பானர்ஜி உறுதி அளித்த நிலையில்,  போராட்டத்தை விலக்கி கொள்வதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று அனைத்து மருத்துவமனைகளும் வழங்கம்போல பணிகளை தொடங்கி உள்ளன.

கடந்த ஒரு வாரமாக சரியான சிகிச்சையின்றி அல்லல்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துளளனர்.