கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுதும் மார்ச், 25 முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந் நிலையில், மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, மாநிலத்தில் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 8 முதல் படிப்படியாக மீண்டும் இயங்கும்.

மாநிலத்தில் செப்டம்பர் 7, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழுமையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில், தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்படும். பொது மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.

குறிப்பிட்ட நாட்களில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமானங்கள் அனுமதிக்கப்படாது. கல்வி நிலையங்கள், பயிற்சி நிறுவனங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் செயல்பட தடை நீடிக்கிறது.

உள்ளூர் நிர்வாகத்தின் தேவையான அனுமதியுடன் திறந்தவெளி தியேட்டர்கள் செப்டம்பர் 21 முதல் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்து உள்ளது.