குடியுரிமை சட்டம் எதிர்ப்பு: நாளை நேரில் வந்து விளக்கம் அளிக்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு, ஆளுர் ஜெகதிப் தங்கர் உத்தரவிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அசாம், திரிபுராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அதில் மமதா பானர்ஜி கலந்து கொண்டார். தமது உயிர் போனாலும் போகட்டும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என்று முழங்கினார்.

இதுகுறித்து ஆளுநர் ஜெகதிப் தங்கர் கேள்வி எழுப்பி இருந்தார். நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் கூறியிருந்தார். ஆனால் இதற்கு டுவிட்டரில் மமதா பானர்ஜி பதில் தெரிவித்து இருந்தார். கடிதம் ஒன்றையும் அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மாநிலத்தை தொடர்ந்து குற்றம்சாட்டுவது வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந் நிலையில். மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை ஆளுநர் ஜெகதிப் தங்கர் வெளியிட்டுள்ளார். அதில், மேற்கு வங்கத்தில் எழுந்துள்ள நிலை குறித்து நாளை நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே தலைமை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோரை அழைத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. இது மிகவும் எதிர்பாராத ஒன்று என்று கூறியிருக்கிறார்.