கொல்கத்தா

மேற்கு வங்க அரசு அம்மாநில மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க நேற்று பயிற்சி புத்தகங்கள் வழங்கி உள்ளது.

தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் அவசியமாக உள்ளது.   இந்தி மற்றும் மாநில மொழிகளில் இந்த போட்டித் தேர்வுகள் நடைபெற்ற போதிலும் பெரும்பாலான தேர்வுகளில் ஆங்கில மொழித் திறன் தேர்வும் இடம் பெற்றுள்ளது.   இதனால் மேற்கு வங்க மாநிலம் தங்கள் மாநில மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறனை வளர்க்க முடிவு செய்தது.

இது குறித்து அம்மாநில பாடத்திட்டக் குழுத் தலைவர் அபிக் மஜூம்தார், ”மாணவர்கள் பலர் பயத்தின் காரணமாக ஆங்கில மொழியைக் கற்கத் தயங்கி வருகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி எளிதாக ஆங்கில மொழியைக் கற்று மொழித் திறனை வளர்த்துக் கொள்ள அரசு உதவ முன் வந்துள்ளது.  அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

அரசு நடத்தும் 80,000 பள்ளிகளில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.   இந்த புத்தகத்தில் உள்ள பயிற்சிகள் மூலம் மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ள முடியும்.  சென்ற வருடம் இத்தகைய பயிற்சிப் புத்தகங்கள் 3 மற்றும் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.