கொல்கத்தா

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையை மேற்கு வங்க அரசு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடத்தில் வரும் ஆண்டில் இருந்து சேர்க்க உள்ளது.

ராமகிருஷ்ண பரஹம்சரின் சீடரான விவேகானந்தர் காளியின் அருள் பெற்றவர் என  போற்றப்படுபவர்.   அவர் தமிழ்நாட்டில் உள்ள கன்யாகுமரியில் தற்போது விவேகானதர் பாறை என அழைக்கப்படும் இடத்தில் தியானம் செய்து அருள் பெற்றவர்.   அவர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

அது நடந்து தற்போது 125 ஆண்டுகள் முடியப் போகிறது.  அதை ஒட்டி கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.  அப்போது மேற்கு வங்க அரசுக்கு விவேகானதரின் உரையை மாணவர்கள் அறியுமாறு செய்யக் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   அந்த வேண்டுகோளுக்கும் மேற்கு வங்க அரசு செவி சாய்த்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபையில் பாடத்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் விவேகானந்தரின் சிகாகோ உரையை பாடத் திட்டத்தில் சேர்க்கும் தீர்மானத்தை மம்தா முன் வைத்தார்.   கூட்டத்தில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதை ஒட்டி வரும் வருடத்தில் இருந்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடதிட்டத்தில் இந்த உரை சேர்க்கப்பட்டுள்ளது.

எற்கனவே ராமகிருஷ்ண மடத்துக்கு ரூ. 10 கோடி நிதி உதவியை மேற்கு வங்க அரசு அளித்திருந்தது.  தற்போது மேலும் ரூ. 10 கோடி நிதியை அரசு அளிக்க  திட்டமிட்டுள்ளது.