கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அங்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கானது, பாரதீய ஜனதாவின் பேரணிகளை தடுப்பதற்காகவே என்றும் பேசியுள்ளார் அம்மாநில பாரதீய ஜனதா தலைவர் திலீப் கோஷ்.

மேற்குவங்கத்தில் தற்போதைய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 23,377 என்பதாகவும், ஒவ்வொரு நாளும் புதிதாக தொற்று அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை 3000 என்பதாகவும் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், வேறுவிதமாக பேசியுள்ளார் அம்மாநில பாரதீய ஜனதா தலைவர் திலீப் கோஷ்.

வரும் 2021 சட்டசபைத் தேர்தலுக்காக, பாரதீய ஜனதா திட்டமிட்டிருக்கும் தேர்தல் பிரச்சாரப் பேரணிகளை தடை செய்வதற்காகவே, கொரோனா பரவல் என்ற பெயரில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி என்றுள்ளார் அவர்.

அவரின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தபின்னர், உள்ளூர் மீடியா தனது கருத்தை தவறாக திரித்துவிட்டதாக கூறிய அவர், அதேசமயம் கிராமப்புற மேற்குவங்கம், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாகவே உள்ளதாகவும் கூறினார்.

மேலும், தனது தொண்டர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்து, விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென தான் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர், மீடியா தனது கருத்தை தவறாக எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்.