ஐ.நா. அமைப்பின் விருதுகளை தட்டிச்சென்ற மேற்குவங்க அரசின் திட்டங்கள்

கொல்கத்தா: மேற்குவங்க அரசின் உத்கர்ஷ் பங்களா மற்றும் சபூஜ் சதி ஆகிய 2 திட்டங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் விருதுகளை வென்றுள்ளன.

இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில், மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

மொத்தம் 18 பிரிவுகளில், 1062 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், உத்கர்ஷ் பங்களா திட்டமானது, திறன் கட்டமைப்பு என்ற வகைப்பாட்டில், உயரிய விருதினைப் பெற்றுள்ளது.

மேலும், சபூஜ் சதி என்ற திட்டமானது, ஐசிடி விண்ணப்பத்தின்கீழ், முன்னோடி திட்ட வகைகளுள் முதல் 5 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டது.

திறன் மேம்பாட்டு பயிற்சியளித்து, ஆண்டிற்கு 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான மிதி வண்டிகளை வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டவை இந்த திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி