பெங்களூரு: மேற்கு வங்க தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது இல்லை என்று பெங்களூரு அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் முடிவு எடுத்திருக்கின்றனர்.

கடந்த 26ம்  தேதி பெங்களூரு போலீசார், வங்க தேசத்தினரை சேர்ந்த 60 பேரை கைது செய்தனர். போதிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக இந்தியா வந்தவர்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இதையடுத்து, பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கு வங்கத்தினரை பணி அமர்த்த குடியிருப்புவாசிகள் அனுமதி மறுத்து வருகின்றனர்.

கடுபீசனஹள்ளி, கோரமங்களா, பனாத்தூர் என பல பகுதிகளில் இந்த முறையை அடுக்குமாடி வாசிகள் கையாள ஆரம்பித்திருக்கின்றனர். போலீசாரின் விசாரணை, பயம் காரணமாக அவர்கள் தவிர்க்க தொடங்கி இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 25,000 மேற்குவங்க தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், யாரும் அதிகாரப்பூர்வமாக மேற்கு வங்க தொழிலாளர்களை உள்ளே விட மாட்டோம் என்று அறிவிக்கவில்லை.

இது குறித்து குடியிருப்புவாசி ஒருவர் கூறியிருப்பதாவது: மற்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் நடப்பவற்றை அடிப்படையாக கொண்டே அவர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக போலீசாரும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி உள்ளனர். ஏன் மேற்கு வங்கத்தினரை அனுமதிக்க மறுக்கின்றனர் என்பதற்கு காரணம் உள்ளது. அவர்கள் அனைவரும் வங்கதேசத்தினரை போன்று இருப்பதாலும், மொழி பிரச்னையாலும் இந்த குழப்பம் ஏற்படுகிறது என்றார்.