ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணியோ முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்தியாவின் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சிற்கு மேற்கிந்திய அணியிடம் பதில் இல்லை. இஷாந்த் ஷர்மா இதுவரை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, அதன்பிறகு 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்தது. கடைசிநேரத்தில் ஜடேஜா 58 ரன்கள் விலாசி நிலைமையை மாற்றினார். இஷாந்த் ஷர்மாவும் 19 ரன்கள் அடித்தார்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ராஸ்டன் சேஸ் மட்டுமே அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். ஹெட்மெயர் 35 ரன்களும், ஷாய் ஹோப் 24 ரன்களும், கேம்ப்பெல் 23 ரன்களும் அடித்தனர். ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டு 189 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளும், பும்ரா, ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் எடுத்தனர். தற்போதைய நிலையில் இந்தியா 108 ரன்கள் முன்னிலையில் உள்ளது.