டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து நோக்கி புறப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்..!

ஆன்டிகுவா: இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் விமானம் பிரிட்டனை நோக்கிப் புறப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூலை 8ம் தேதி செளதாம்ப்டன் நகரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி மொத்தம் 21 நாட்களுக்கு நீடிக்கிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடராகும் இது. ஜூலை 28ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடர் மீண்டும் துவங்குவதை ரசிகர்கள் ஆர்வமுடன் கவனிக்கின்றனர். ஆனால், இந்தப் போட்டிகள் ரசிகர்கள் யாரும் இல்லாமலேயே நடத்தப்படுகின்றன. இங்கிலாந்தைப் பொறுத்தவரை, டெஸ்ட் போட்டிகளுக்கு மவுசு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் போட்டிகள் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், மான்செஸ்டர் சென்று இறங்கியதும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

அதேசமயம், இங்கிலாந்து புறப்படும் முன்னதாகவே, அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அதில் தேறுவோர் மட்டுமே விளையாட்டில் அனுமதிக்கப்படுவர்.

இத்தொடருக்கு, மேற்கிந்திய அணியின் சார்பில் மொத்தம் 11 ரிசர்வ் வீரர்கள் பிரிட்டன் செல்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கிந்திய அணி விபரம்:

ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், குர்மா போனர், கிரெய்க் பிராத்வெய்ட், ஷாம்ரா ப்ரூக்ஸ், ஜான் கேம்பெல், ரஸ்டன் சேஸ், ரக்கீம் கார்ன்வால், ஷேன் டோவ்ரிச், செம்மார் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோஸப், ரேமான் ரீபர், கீமார் ரோச்.

ரிசர்வ் வீரர்கள் விபரம்:

சுனில் அம்பரிஸ், ஜோஸ்வா டாசில்வா, ஷானன் கேப்ரியல், கியான் ஹார்டிங், கையில் மேயர்ஸ், பிரஸ்டன் ஸ்வீன், மர்குயினோ மின்ட்லி, ஷேனே மோசெலி, ஆன்டர்ஸன் பிலிப், ஓஸ்னேதாமஸ், ஜோமல் வாரிக்கன்.