ஆண்டிகுவா: வெற்றிக்கு 419 ரன்கள் என்ற பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதும், போராட்டம் என்பதே சிறிதும் இல்லாமல், டி-20 போட்டியைப் போல் ஆடி படுதோல்வி அடைந்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்தியா நிர்ணயித்த 419 ரன்கள் இலக்கை நோக்கி பயணிக்கையில், வெறும் 26.5 ஓவர்கள் மட்டுமே ஆடி, 100 ரன்களுக்கு சாய்ந்துவிட்டது மேற்கிந்திய தீவுகள். இதில் எக்ஸ்ட்ராஸ் எண்ணிக்கை 8.

மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியபோது, முதல் இன்னிங்ஸில் ஓரளவு கண்ணியமான ரன்களை எடுத்த அணி என்பதால், இந்தமுறையும் நல்ல ஃபைட் கொடுக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் ஒரு முடிவோடு வந்ததைப்போல் ஆடினர்.

துவக்க ஜோடிகளான பிராத்வைட் மற்றும் கேம்ப்பெல் ஆகியோர் முறையே 1 மற்றும் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
சொத்தை பந்துகளுக்கு நாங்கள் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தோம் என்று முதல் இன்னிங்ஸ் குறித்து திருவாய் மலர்ந்த ரோஸ்டன் சேஸ், இந்தமுறை வெறும் 12 ரன்களுக்கெல்லாம் மிகவும் பெருந்தன்மையுடன் தனது விக்கெட்டை போனால் போகிறதென்று ஷமிக்கு விட்டுக் கொடுத்தார்(!)

பின்வரிசையில் இறங்கிய கேமர் ரோச் எடுத்த 38 ரன்களும், கம்மின்ஸ் எடுத்த 19 ரன்களும்தான் சற்றே கவுரவமான ரன்கள். ஆக மொத்தத்தில், 100 ரன்களுக்கு பை பை சொல்லி 318 ரன்களில் தோல்வியடைந்தது.

இந்திய தரப்பில் கடந்தமுறை இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் என்றால் இந்தமுறை பும்ரா 5 விக்கெட்டுகள். ஷர்மாவுக்கு 3 விக்கெட்டுகளும், ஷமிக்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன. 2 டெஸ்ட்டுகள் மட்டுமே கொண்ட இந்த தொடரில், தற்போதைய நிலையில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.