டில்லி

மேற்கத்திய நாடுகளின் பாணியில் இங்கு மனித உரிமையை அமல்படுத்த முடியாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் 26 ஆம் ஆண்டு நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.   இந்த விழாவில் அவருடன் மனித உரிமை ஆணையத் தலைவரும் முன்னாள் தலைமை நீதிபதியுமான எச் எல் தாத்து உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர் கடந்த ஜனவரி மாதம் இந்த ஆணையத்துக்கு இயக்குநராக நியமிக்கப்பட்ட பிரபாத் சிங்கின் பணியை வெகுவாக புகழ்ந்தார்.

அமித்ஷா தனது உரையில், “மனித உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது.  காவல்துறை அட்டூழியம் மற்றும் விசாரணையின் போது மரணம் ஏற்படுவதற்கு மட்டும் அல்லாமல் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுபவருக்கும் இது பொருந்தும்.   குறிப்பாகக் காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் நக்சல்வாதிகளால் அதிக அளவு மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளது.   அவற்றை நாம் இந்தியக் கண்ணோட்டத்துடன் ஆய்ந்து தீர்வு காண வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள மனித உரிமைக் கொள்கைகள் இங்குச் சரிப்படாது.  பெண்களுக்கு கழிப்பறை வசதிகளும் பாதுகாப்பான சமையல் வசதிகளும் முக்கிய மனித உரிமையாகும்.   இந்த விவகாரத்தில் மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இதன் மூலம் பல தனிப்பட்டவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் தலைமையில் நாடு தற்போது மனித உரிமை மீறல் இல்லாத நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டுள்ளது.   இந்தியாவுக்கு என மனித உரிமை உள்கட்டு உள்ளது.  நமது குடும்ப முறை  பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது.  நமது கிராம வாழ்க்கை முறையின் தர்மத்தின் மூலம் பல ஏழைகள் கவனிக்கப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.