ஜெயலலிதாவுடன் பூங்குன்றன் ( கோப்பு படம்)

ஜெயலிலதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லத்தில் தற்போது வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

“ஜெயலலிதா  வாழ்ந்த இல்லத்திலேயே சோதனையா” என்று அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த ( தினகரன் ஆதரவாளர்கள்) கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வேதா இல்லத்தில் சோதனை நடக்கக் காரணம், ஜெயலலிதா தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் சசிகாலா குடும்பத்தினரை குறி வைத்து வருமானவரித் துறை பிரம்மாண்டமான சோதனையை நடத்தியது. இதில் சசிகலாவின் குடும்பத்தாரே பெரும்பாலும் இலக்காக  இருந்தனர். அவரது உறவினர் அல்லாதவர்கள் சிலரே ரெய்டு பட்டியலில் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் பூங்குன்றன்.

இவர் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக கிட்டதட்ட 20 ஆண்டுகள் இருந்தவர்.  அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் வெளியீட்டராகவும் இருந்தவர். சசிகலாவை போயஸ் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றிய காலகட்டத்தில் மிடாஸ் சாராய ஆலைக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.  சென்னை அடையாறு பகுதியில் உள்ள இவரது இல்லத்திலும் சமீபத்தில் வருமானவரி சோதனை நடந்தது.

சோதனையை தொடர்ந்து பூங்குன்றனை அழைத்து தனியாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நீண்ட விசாரணை முடிந்து இன்று இரவுதான் பூங்குன்றன் வெளியே வந்தார்.

அதன் பிறகு சிறிது நேரத்திலேயே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தில் சோதனை துவங்கியது. இதையடுத்து, வருமானவரி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியபோது பூங்குன்றன் முக்கிய தகவல்களை சிலவற்றைக் கூறியிருக்கலாம் என்றும், இதையடுத்தே போயஸ் இல்லத்தில் அதுவும் பூங்குன்றன் அறையைக் குறிவைத்த சோதனை நடக்கிறது என்றும் யூகம் கிளம்பியிருக்கிறது.

தற்போது போயஸ் கார்டன் வேதா இல்லம் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பிறகு எதற்காக சோதனை என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்கு முன்பிருந்தே பூங்குன்றன் அறை மூடப்பட்டே இருக்கிறது.  அதனால் பூங்குன்றன் தகவலின் பேரி, அங்கு ஏதோ முக்கிய ஆவணம் இருப்பதாக வருமானவரித்துறை நினைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.