#MeTooக்கு எதிராக #WeToo: களத்தில் குதித்த தமிழ்த் திரையுலகினர்

சென்னை:

ங்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பிரபலங்கள் டிவிட்டரில் உள்ள மீ டூ ஹேஸ்டேக்கில் பதிந்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மீ டூவில் தமிழகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து  குறித்து பாலியுல் புகார் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி காரசாரமான விவாதப்பொருளாகி உள்ளது.

இந்த நிலையில், ‘மீ டூ’க்கு எதிராக  பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டூ’ என்ற ஹேஸ்டேக் தொடங்கி உள்ளனர்.

தமிழக திரையுலகை சேர்ந்தவர்கள் இந்த ஹேஸ்டேக்கை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், நடிகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  சேர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” (#MeToo) என்ற பெயரில் டிவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த ஹேஸ்டேக், அமெரிக்காவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து, அம்பலப்படுத்தும் நோக்கில் சமூக வலைதளமான டிவிட்டரில்  #மீ டூ  (நானும் பாதிக்கப்பட்டேன் /  #MeToo) தொடங்கப்பட்டது. தற்போது இந்த மீ டூ  ஹேஸ்டேக் உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் சமீப நாட்களாக இந்த ஹேஸ்டேக்கில் பல அதிர்ச்சிகரமான தகவ்லகள் பதிவிடப்பட்டு வரு கின்றன. அவ்வகையில், மத்திய அமைச்சர் உள்பட பாலிவுட் பிரபலங்களை தொடர்ந்து தமிழக திரையுலகிலும் புயலை கிளப்பி வருகிறது.

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வீ டூ குறித்து,‘திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியதாவது:-

விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் சேர்ந்து பழகும் பெண்கள் மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகாரை கையில் எடுக்கின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் சில பெண்கள் செயல்படுகின்றனர்.

இதுபோன்ற புகார்களை அனுமதித்தால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக  #WeToo தொடங்கப் பட்டு உள்ளது.  இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.

இந்த குறித்து,  தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் வக்கீல் அருள்துமிலன், பொதுச்செயலாளர் வக்கீல் மதுசூதனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘மீ டூ’ இயக்கம் சார்பில் கொடுக்கப்படும் புகார்களின் உண்மை தன்மை குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை செய்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு குற்றம் சுமத்தப்பட்டவரின் புகைப்படம், பெயர், முகவரியை இணையதளம், பத்திரிகை, ஊடகம் போன்றவற்றில் வெளியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறும் பாடகி சின்மயி கடந்த 2013-ம் ஆண்டு முகநூல் பக்கத்தில் தன்னை தொந்த ரவு செய்ததாக கூறி பேராசிரியர், அரசு ஊழியர் மற்றும் சில நபர்கள் மீது புகார் கொடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த வழக்கை விரைந்து நடத்தாமல் கிடப்பில் போட்டதன் மர்மம் என்ன?.

இன்று கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ள சின்மயி அன்றே ஏன் தெரிவிக்கவில்லை? விளம்பரத்துக் காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோதான், இந்த புகாரை அவர் தெரிவித்துள்ளார் என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.

எனவே நேர்மையான ஆண்கள், திறமைமிக்க ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் அச்சுறுத்தல்களை புகார் அளித்து தீர்வுகாண ஆண்களுக்கு தேசிய ஆண்கள் ஆணையம் அமைத்து அதன்மூலம் ஆண்கள் சந்திக்கும் சமூக பிரச்சினைகளை முறையிட வழிவகை செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.