வதந்திகளை பரவாமல் தடுக்க அரசுக்கு வாட்ஸ்அப் உறுதி

டில்லி

வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பராவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசுக்கு அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் சமீபகாலமாக பெருமளவில் தவறான செய்திகள் பரவி வருகின்றன.   இதனால் பல இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டுள்ளன.   உதாரணமாக வாட்ஸ் அப் மூலம் குழந்தைக் கடத்துபவர்கள் பற்றி பரவிய வதந்திகளால் சந்தேகத்தின் பேரில் நாடெங்கும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் நேற்று இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.   அதை ஒட்டி  வாட்ஸ்அப் மற்றும் அதை நிர்வகிக்கும் முகநூல் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு அறிக்கை அனுப்பியது.   அந்த அறிக்கையில் வதந்திகளை பரப்புவதை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

அத்துடன் இத்தைகய வதந்திகளால் கொலைச் சம்பவங்கள் நடப்பதாகவும் அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அரசின் தொலை தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதற்கு வாட்ஸ்அப் தனது பதிலை அளித்துள்ளது.

அந்த பதிலில், “எங்கள் செயலி மூலம் வரும் தவறான தகவல்களால் பலர் கொலை செய்யபட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.   இனி இவ்வாறு போலித் தகவல்கள் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கிறோம்.   இவ்வாறு வதந்திகள் பரவுவதை தடுக்க அரசு, சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்.  இனிமேல் நாங்கள் வதந்திகள் பரவுவதை முழு மூச்சுடன் தடுப்போம்” என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.