ஆம்ஆத்மி அமைச்சர் மனிஷ் சிசோடியா கூறியது என்ன?

புதுடெல்லி: ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில இயங்கும் இந்திய அரசியலில் உங்களால் எப்படி நிலைக்க முடியும் என்று நாங்கள் அரசியலில் நுழைந்த புதிதில் மக்கள் எங்களிடம் கேட்டார்கள் என்றுள்ளார் டெல்லி மாநில அமைச்சரும், ஆம்ஆத்மி மூத்த தலைவருமான மனிஷ் சிசோடியா.

டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று ஆம்ஆத்மி அரசு பதவியேற்றுக் கொண்டது. இதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசினார் மனிஷ் சிசோடியா.

அப்போது அவர், “நாங்கள் முதன்முதலில் அரசியலில் நுழைந்தபோது, இந்த நாட்டில் அரசியல் என்பது ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலானது எனவும், இதில் நீங்கள் எப்படி நிலைக்கப் போகிறீர்கள் எனவும் மக்கள் எங்களிடம் கேட்டனர்.

ஆனால், இப்போது நாங்கள் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கிறோம். கெஜ்ரிவாலை முதல்வராக தேர்வுசெய்த அதே பொதுமக்களை எங்களின் எதிர் போட்டியாளர்கள் மோசமாக பேசியதுதான் இதற்கு காரணம்.

மற்ற கட்சிகளைப்போல நாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். ஆனால் கெஜ்ரிவால் அளித்த 10 உத்தரவாதங்களை தவிர்த்து மற்ற அனைத்தும் பொய் என மக்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றுவோம்” என்றார்.