அரசியல் என்னாச்சு? ஓய்வெடுக்க இன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்

சென்னை:

ரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தனி டிவி சேனல் தொடங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று இரவு குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க அமெரிக்கா புறப்படுகிறார்.

இது ரஜினி ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் இடையே சலசலப்பை உருவாக்கி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி ரஜினி தான் அரசியலுக்கு வருவதாகவும், அது ஆன்மிக அரசியல் என்றும் கூறியிருந்தார். கடந்த  வருடம் (2017) டிசம்பர் 31-ம் தேதி தனது  ரசிகர்கள் மத்தியில் தனது அரசியல் அறிவிப்பை அறிவித்து தமிழக அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்தார்.

அதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் என பெயர் மாற்றப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் அவரது அரசியல் களத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரஜினி, அவ்வப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி பரபரப்பாக ஏதாவது கூறி, படத்தை லாபகரமான ஓட்டி வருகிறார்.

அவரது அரசியல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு அவர் நடித்துள்ள  கபாலி, காலா படங்கள் வெளியான சமயங்களில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வந்தார். படத்தை வெற்றிப்படமாக்கவே ரஜினி அவரது ரசிகர்களை அரசியல் என்று கூறி  ஏமாற்றி வருகிறார் என்று  பலரால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், 2.0 படம் மற்றும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படம் குறித்து தனது மக்கள் (ரசிகர்) மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவதை நிறுத்தி உள்ளார்.

ரஜினி தீவிர அரசியல் இறங்குவார் என எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் அவரது ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினியின் அறிவிப்பு வெளியிட்டு ஒரு வருடம் முடியப்போகும் நிலையில், மேற்கொண்டு எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவது, அவர்மீதான அதிருப்தியை வளர்த்து வருகிறது.

இந்த நிலையில் பேட்ட படத்தில் நடித்ததால் ஏற்பட்டுள்ள களைப்பை போக்க ரஜினி தனது குடும்பத்தினருன் ஓய்வு எடுக்க இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு சுமார் 15 நாட்கள் ஓய்வை கழித்துவிட்டு பொங்கல் சமயத்தில் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.