ருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, நான்கு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

படம்: மாடல்

அவர் மாணவிகளை “அழைத்தது” உயர் அதிகாரிகள் என்பதில் ஆரம்பித்து, மிக உயரிய பதவியில் உள்ளவர்கள் வரை புகார்க்கரங்கள் நீள்கின்றன. இதையடுத்து ஆளுநர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீர சந்தானம் தலைமையில் இது குறித்து விசாரணை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற புகார்கள் புதிதல்ல. காலம் காலமாக இது போன்ற குற்றச்சாட்டுக்கள் மாணவிகளால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு உதாரணம், பாரதியார் பல்கலை கழக பி.எச்.டி. மாணவி அனிதா.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தார் அனிதா. அப்புகாரில்,  “பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் தனது பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்புக்கு தடை ஏற்படுத்துவதாகவும், ஒருநாள் தன்னுடன் தங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அலைபேசியில் ஆபாசமாகப் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.

அதே போல, எல்சமாசெபாஸ்டின் என்ற மற்றொரு பி.எச்.டி. மாணவி புகார் தெரிவித்தார். கோவை ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இப்புகாரை அளித்தார்.

அதில், “ஆண்டு ஆங்கில துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி படிப்புக்காக சேர்ந்தேன். முறையாக அனைத்து படிப்புகளையும் நிறைவு செய்தேன். 7 ஆண்டு படிப்பு முடிந்து பட்டம் பெறுவதற்கான செமினார் நடைபெற்றது. இதற்காக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் உள்பட பார்வையாளர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுத்து இருந்தேன். இந்தநிலையில் கண்காணிப்பாளரும், பேராசிரியருமான அவர், தான் செமினாருக்கு வரவேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும், இந்த பணத் தில் துறைத்தலைவர், மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டியது உள்ளது என்றும் கூறி மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் புகார் செய்தேன். இதையடுத்து எனது செமினாருக்காக வேறு கண்காணிப்பாளரை நியமித்தனர். அவர் முன்னிலையில் நான் செமினார் நடத்தினேன். அதன்பின்னர் நான் சிறப்பாக செய்ததாக பாராட்டியதுடன், தேர்ச்சி பெற்றதாக சான்றி தழ் அளித்தனர். அதன்பின்னர் தகுதி சான்றிதழுக்காக காத்திருந்தேன். ஆனால் அது எனக்கு வர வில்லை. இது குறித்து துறை அதிகாரிகளிடம் அணுகியபோது, அவர்கள் என்னிடம், ‘நான் செமினாரில் சரியாக செயல்படவில்லை என்றும் மீண்டும் தேர்வு நடத்த உள்ளதாகவும்’ கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நான் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது குறித்து கேட்ட போது பேராசிரியர்கள் மழுப்பினர். எனக்கு முதலில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, ‘பல்கலைக்கழகத்தில் நான் சொல்லாமல் பட்டம் வழங்க மாட்டார்கள் என்றும், தான் கூறியபடி ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தான் சொல்லும் இடத்துக்கு தனியாக வரவேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

ஒரு பெண் என்று பார்க்காமல் இரவு நேரத்தில் போன் செய்து ஆபாசமாக பேச தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசிய வார்த்தைகளை சொல்லவே எனக்கு வெட்கமாக உள்ளது. அந்த அளவுக்கு என்னை தொல்லை செய்தார். ஆராய்ச்சி பட்டப்படிப்பை நிறைவு செய்ய அவர்கள் கூறியபடி நடக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். இதற்கு துறை தலைவர் உள்பட சிலர் ஆதரவாக இருந்தனர். எனவே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆராய்ச்சிபடிப்பு சான்றிதழை பெற்று தருமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்’ என எல்சமா செபாஸ்டின் தெரிவித்தார்.

இது நடந்தது மூன்று வருடங்களுக்கு முன். அதாவது 2015ம் ஆண்டு. ஆனால் இந்த இரு புகார்களையும் விசாரிக்கும்டி அப்போதைய ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆனால் அது என்ன ஆனது என்று தெரியவில்லை.

ஆக, மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த நினைக்கும் போக்கு பல்வேறு பல்கலைகளில் பல ஆண்டுகளாக நடந்துவருவது வேதனை.