புதுடெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் உணவுகள் மற்றும் பானங்களில், கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை சுகாதார குறியீட்டைவிட அதிகமான அளவில் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், ‍மொத்தம் 12 நாடுகளைச் சேர்ந்த 400000 உணவு மற்றும் பான பாக்கெட்டுகள் சோதனை செய்யப்பட்டன. இதனடிப்படையில், சரியான சுகாதார குறியீடுகளை பின்பற்றி பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் பிரிட்டன் முதலிடம் வகிக்கிறது.

இதற்கடுத்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வருகின்றன. இந்த ஆய்வில், ஆஸ்திரேலிய நாட்டின் Health Star Rating System பின்பற்றப்பட்டது. இதனடிப்படையிலேயே ஆற்றல், உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் அளவு மதிப்பிடப்பட்டது.

இந்த ஆய்வின்படி, இந்தியா மற்றும் சீனாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பிரிட்டனின் 2.83 ரேட்டிங் அளவு, அமெரிக்காவின் 2.82 ரேட்டிங்க அளவு மற்றும் ஆஸ்திரேலியாவின் 2.81 ரேட்டிங் அளவு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ரேட்டிங் அளவு 2.27 மட்டுமே.

அதேசமயம், சீனாவின் ரேட்டிங் அளவு 2.43 என்பதாகவும், சிலி நாட்டின் ரேட்டிங் அளவு 2.44 என்பதாகவும் உள்ளது. அதேசமயம், இந்தியாவின் பாக்கெட் உணவுகள் மற்றும் பானங்கள் ஆகியவை அதிக ஆற்றல் நிறைவு கொண்டவை என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.